மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி
பல்லடம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இந்த நிலையில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் முத்துரத்தினம், அ.தி.மு.க. கூட்டணியில் எம்.எஸ்.எம் ஆனந்தன், உள்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய 713 வி.வி.பேட் எந்திரங்களில், போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள், அந்த கட்சியின் சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தும் பணி நடைபெற்றது. அ.தி.மு.க. தி.மு.க. உள்ளிட்ட 20 வேட்பாளர்களுடன், "நோட்டா" உள்ளிட்ட 21 எண்கள் கொண்ட பட்டியல் பேலட் பேப்பர் பொருத்தும் பணி நடைபெற்றது.
இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ் தலைமையில், தேர்தல் மேலிட பார்வையாளர் மசீர்ஆலம், முன்னிலையில் பொறியாளர்கள் "பேலட் பேப்பர்" பொருத்தும் பணியை மேற்கொண்டனர். இதில் பல்லடம் தாசில்தார் தேவராஜ், துணை தாசில்தார்கள் மயில்சாமி, சபாபதி, மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.