திருக்கோவிலூர் பகுதியில் பறக்கும்படை வாகன சோதனையில் ரூ.7 லட்சம் பறிமுதல்
திருக்கோவிலூர் பகுதியில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.7 லட்சத்து 33 ஆயிரத்து 540-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்
மணலூர்பேட்டை
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் முன்பு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தேவரடியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாயவன் மகன் சிவராஜ்(வயது 30) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவந்த ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மணலூர்பேட்டையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் சுப்பிரமணி தலைமையிலான பறக்கும்படையினர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பண்ருட்டி தாலுகா மாவட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பிரபு இவரது மனைவி அம்சவல்லி ஆகியோரிடம் சோதனை செய்தபோது அவர்கள் உரிய ஆவணம் இன்றி ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் எடுத்து வந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.
மேம்பாலம் அருகே
மணலூர்பேட்டை மேம்பாலம் அருகே ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ஷபான்கான் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பேங்க் தெருவைச் சேர்ந்த பச்சையப்பன்(36) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.80 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். 3 வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்தை ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜாமணியயிடம் ஒப்படைத்தனர்.
திருவெண்ணெய்நல்லூர்-கடலூர் சாலை
திருக்கோவிலூர் அருகே உள்ள திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேசன். இவர் நேற்று முன்தினம் சரக்கு வாகனத்தில் திருவெண்ணெய்நல்லூர்-கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரம் கலெக்டர் அலுவலக கண்காணிப்பு குழு அலுவலர் லோகநாதன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வெங்கடேசன் ஓட்டி வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 540 இருந்ததை கண்டுபிடித்தனர்.
உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை திருக்கோவிலூர் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.