114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என்று கலெக்டர் பிரவீன் நாயர் கூறினார்.

Update: 2021-03-30 16:50 GMT
நாகப்பட்டினம்:
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என்று கலெக்டர் பிரவீன் நாயர் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளுக்கு நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்  நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், நாகை, கீழ்வேளுர், வேதாரண்யம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1861 வாக்குசாவடிகளுக்கு தேவையான தேர்தல் ஆணைய படிவங்கள், உரைகள், தீப்பெட்டி, மெழுகுவத்தி, எழுதுபொருட்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரவீன் நாயர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள 348 வாக்குசாவடிகளில் 18 வாக்குச்சாவடிகளும்,, மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 342 வாக்குசாவடிகளில் 20 வாக்குச்சாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 383 வாக்குசாவடிகளில் 17 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
அதேபோல் நாகை மாவட்டத்திற்குட்பட்ட நாகை சட்டமன்ற தொகுதியில் உள்ள 266 வாக்குச்சாவடிகளில் 27 வாக்குச்சாவடிகளும், கீழ்வேளுர் சட்டமன்ற தொகுதியில் 251 வாக்குச்சாவடிகளில் 18 வாக்குச்சாவடிகளும், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் 271 வாக்குச்சாவடிகளில் 14 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில்  மொத்தம் 114 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.  
இந்த வாக்குக்சாவடிகளில் வாக்குப்பதிவு தினத்தன்று கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படும். பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பதற்றமான வாக்குசாவடிகளில் நுண் பார்வையாளராக மத்திய அரசு பணியில் உள்ள அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குசாவடிகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையாக கண்காணித்திடுவார்கள்.
தேர்தல் நடத்தை வீதிமீறல்
தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டுஅறை 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. 
தேர்தல் நடத்தை விதிமீறல்கள், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழு மூலம் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.17 லட்சத்து 11 ஆயிரத்து 772 ரொக்கத்தொகை கைப்பற்றபட்டு தொடர்புடையவர்கள் உரிய ஆவணங்கள் சமர்பித்ததன் அடிப்படையில் ரூ.6 லட்சத்து 60 ஆயிரத்து 487 மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் இதுவரை ரூ.26 லட்சத்து 95 ஆயிரத்து 715 மதிப்பிலான பொருட்கள் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் மூலம் கைப்பற்றப்பட்டு, உரியஆவணங்கள் வழங்கியதன் அடிப்படையில் ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்து 715 மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.. மேலும் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ.1 கோடியே 23 லட்சத்து 5 ஆயிரத்து 174 மதிப்பிலான மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும் செய்திகள்