சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டி அகற்றம்
கடலூர்-மடப்பட்டு இடையே சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன.
நெல்லிக்குப்பம்,
தமிழ்நாடு அரசு சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொழில் தடை திட்டத்தின் கீழ் ரூ.230 கோடி செலவில் கடலூர் கோண்டூர் முதல் மடப்பட்டு வரை 38 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அதாவது இரு வழித்தடம் மற்றும் 7 மீட்டர் சாலையை 10 மீட்டராக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மரங்கள் வெட்டி அகற்றம்
இந்த சாலை விரிவுபடுத்துவதற்காக குமராபுரம், வரக்கால்பட்டு, வில்லுகட்டி அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை ஓரமாக இருந்த மரங்கள் அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பொக்லைன் எந்திரம் மற்றும் ராட்சத எந்திரம் மூலம் மரங்களை அகற்றுவதால் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
50 ஆண்டுகளாக நிழல் கொடுத்த மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்படுவதை கண்டு அப்பதி மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலையை விரிவாக்கம் செய்வது நல்லதுதான். அதற்கு தகுந்தாற்போல் தற்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்றாக அதிகளவு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றனர்.