விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் முறையாக செயல்பட நடவடிக்கை - பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கன் உறுதி
விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் முறையாக செயல்பட நடவடிக்கை என பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கன் உறுதி அளித்தார்.
விருதுநகர்,
விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கன் நகர் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் வாக்காளர்களை சந்தித்து தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். அவருடன் அதிமுக நிர்வாகிகளும் பா.ஜ.க. நிர்வாகிகளும் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் சென்று ஆதரவு திரட்டுகிறார்கள் செல்லும் இடங்களிலெல்லாம் பொதுமக்கள் பா.ஜ.க. வேட்பாளரை நிச்சயமாக ஆதரிப்போம் என உறுதி அளித்து வருகின்றனர்.
பாண்டுரங்கனை ஆதரித்து நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் இத்தொகுதி பொறுப்பாளரான மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தொகுதியில் முகாமிட்டு பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கனின் பிரசார பணிகளை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் வேட்பாளர் பாண்டுரங்கன் தெரிவித்ததாவது;-
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் பள்ளிக் கல்வியில் சாதனை படைத்து வருகிறது. அவர் படித்த பள்ளிகளில் இன்றும் கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற மாணவர்களுக்கும் கல்வி சேவை அளித்து வருகிறது. உயர் கல்வியை பொறுத்தமட்டில் விருதுநகரில் அரசு கல்வியியல் கல்லூரி அரசு இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் அரசு சட்ட கல்லூரி ஆகியவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுப்பேன்.
மேலும் மாணவர் தனித்திறன் மேம்பாட்டிற்காக நேரு யுவகேந்திரா அமைப்புடன் இணைந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான பயிற்சி மையங்கள் இல்லை. பொது நூலகத் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள போட்டித்தேர்வு பயிற்சி மையமும் முறையாக செயல்படாத நிலை நீடிக்கிறது. இதனால் விருதுநகர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மாணவர்கள் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு உரிய பயிற்சிகள் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. எனக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி மையம் முறையாக செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்வேன்.
மேலும் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கான தனித்திறன் மேம்பட பயிற்சி அளிக்க பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் நியமித்து போட்டித் தேர்வுகளில் இப்பகுதி மாணவர்கள் இளைஞர்கள் பெருமளவில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பினை பெற்றிட நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக் கல்வியுடன் தனித்திறன் மேம்பாடு அடைய உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக ஏழை எளிய மாணவர்கள் இம்மாதிரியான பயிற்சிகளை பெற வசதி இல்லாத நிலையில் அவர்களுக்கு இலவசமாக இம்மாதிரியான பயிற்சிகள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் அரசு பள்ளிகளில் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு தேவையான வகுப்பறை கட்டிடங்கள் கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர் தரமான கல்வி பெற வாய்ப்பு ஏற்படும். மேலும் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்க உதவிகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.