பா.ஜ.க. நிர்வாகி உள்பட 3 பேர் கைது
தேர்தல் பறக்கும் படையினருக்கு மிரட்டல் விடுத்த பா.ஜ.க. நிர்வாகி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்;
பட்டிவீரன்பட்டி:
பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு சோதனைச்சாவடியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனையிட்டனர். மேலும் அந்த காரில் கட்டியிருந்த பா.ஜ.க. கொடியை அகற்றுமாறு பறக்கும்படையினர் அறிவுறுத்தினர்.
ஆனால் கொடியை அகற்றாமல், காரில் வந்த ஆத்தூர் வட்டார பா.ஜ.க. நிர்வாகிகள் தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பறக்கும்படை அதிகாரி சவுந்தரராஜன், பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படையினரை தடுத்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பா.ஜ.க. ஒன்றிய இளைஞரணி நிர்வாகி கார்த்திக் (வயது 35) மற்றும் அவருடன் வந்த நெல்லூர் பகுதியை பா.ஜ.க.வினர் அருண்குமார் (40) அக்னி (51) ஆகியோரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.