ஸ்டாலின் முதல்வரான உடன் திருச்சி மேற்கு தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை - தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வாக்குறுதி
ஸ்டாலின் முதல்வரான உடன் திருச்சி மேற்கு தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேரு வாக்குறுதி அளித்தார்.
திருச்சி,
தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளருமான கே.என்.நேரு மேற்கு தொகுதியில் விடுபட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவர் வாக்காளர் களிடையே பேசும்போது, மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு ரூ.1000, முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறாக உயர்த்தப்படும், தற்போது உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மானியம் தரப்படும், மாணவர்களின் கல்வி கடன் ரத்து, கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 இந்த நலத்திட்டங்கள் அனைத்தும் முன்னுரிமை கொடுத்து உங்களுக்கு பெற்றுத் தர உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திருச்சி மேற்கு தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பிரசாரத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., அன்பில் பெரிய சாமி, பகுதி செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜய், மோகன்தாஸ், இளங்கோ தொழிலதிபர் ஜான்சன் குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவஹர், கம்யூனிஸ் டுகள் சிறுபான்மை மாநில துணைத்தலைவர் முகமது முகையத்தீன், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கேர் கல்லூரியில் அமைந்துள்ள தொழிலதிபர் கே.என்.ராமஜெயத்தின் திருஉருவ சிலைக்கு கே.என்.நேரு, கே.என்.ரவிச்சந்திரன், கே.என்.மணிவண்ணன், கே.என்.வினித்நந்தன் உள்ளிட்ட குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர்.