தனியார் பள்ளி மேலாளர் பலி
மரத்தில் கார் மோதிய விபத்தில் தனியார் பள்ளி மேலாளர் பலியானார்.
ஊட்டி
மரத்தில் கார் மோதிய விபத்தில் தனியார் பள்ளி மேலாளர் பலியானார்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மரத்தில் கார் மோதல்
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள எச்.பி.எப். இந்து நகரை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 40). ஊட்டியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளியின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் உள்ள பிங்கர்போஸ்ட்டில் இருந்து தனது அக்கா குழந்தைகளை அழைத்து வருவதற்காக ஹால்ப்லிங்க்ஸ் சாலையில் காரில் சென்றார்.
ஆனால் அவர் காரை வேகமாக ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. மேலும் அதில் படுகாயம் அடைந்து சதீஷ்குமார் சிக்கிக்கொண்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு நடைபயிற்சி சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் காரின் பக்கவாட்டு கதவை உடைத்து படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
செல்லும் வழியிலேயே...
ஆம்புலன்சில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புதுமந்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்பட்ட சாலை வழியாக அதிக வாகனங்கள் செல்லாது. தற்போது அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிக்காக லாரிகள் சென்று வருகின்றன.
இதனால் சாலை அகலப்படுத்தப்பட்டு, வேகத்தடைகள் அகற்றப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.