பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
பொள்ளாச்சி
ஆனைமலை தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் விழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
குண்டம் திருவிழா
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் திருவிழா மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் தொடங்கும்.
அதன்படி கடந்த மாதம் 11-ந்தேதி சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. மறுநாள் 12-ந்தேதி கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
அதை தொடர்ந்து கடந்த 27-ந்தேதி இரவு 8 மணிக்கு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், நள்ளிரவு 11 மணிக்கு அரவான் சிசு ஊர்வலமும் நடைபெற்றது.
காலை 10 மணிக்கு குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து மாலை 4 மணிக்கு அம்மன் தேரோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வந்து குண்டம் மைதானத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
பக்தர்கள் குண்டம் இறங்கினார்கள்
இரவு 9.30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பூ வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் உப்பாறு பகுதிக்கு சென்று புனித நீராடினார்கள்.
பின்னர் செவ்வரளி மாலை அணிந்து அம்மனை வழிப்பட்டனர். அதன்பிறகு காலை 8 மணிக்கு குண்டம் மைதானத்திற்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், 60 அடி நீள குண்டத்தில் அம்மன் அருளாளி தண்டபாணி மல்லிகை பூவை உருட்டி விட்டார்.
அதை தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடனை செலுத்தினார்கள். பின்னர் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குண்டம் பூவை கையில் அள்ளி போட்டு வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணெய் பிரசாதமாக வழங்கப் பட்டது.
செவ்வாய்கிழமை திருத்தேர் நிலை நிறுத்தலும், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
புதன்கிழமை காலை மஞ்சள் நீராடுதலும், இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைகிறது.