கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை
வால்பாறை அருகே பணம் கடத்துவதை தடுக்க கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வால்பாறை
வால்பாறை அருகே பணம் கடத்துவதை தடுக்க கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
தீவிர வாகன சோதனை
அதுபோன்று கோவை அருகே கேரள மாநிலம் இருப்பதால் பணம் கடத்தப்படுவதை தடுக்க இருமாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் வழியாக வரும் வாகனங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள மளுக்கப்பாறை சோதனை சாவடியில் அதிகாரிகள் வாகன சோதனை செய்த போது ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இன்னும் தேர்தலுக்கு ஒருசில நாட்களே இருப்பதால் எல்லையில் இருமாநில போலீசாரும், அதிகரிகளும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தகவல் தெரிவிக்கலாம்
தேர்தலையொட்டி இருமாநிலத்துக்கும் பணம் கடத்தப்படுவதை தடுக்க எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
எனவே பணம் கொண்டு செல்பவர்கள் அதற்கான ஆவணங்களுடன் செல்ல வேண்டும். இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்படும்.
மேலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவது பொதுமக்களுக்கு தெரியவந்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.