ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியராஜன் உடற்பயிற்சி நிலையத்தில் வாக்கு சேகரித்தார்
ஆவடி தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் அமைச்சர் பாண்டியராஜன் உடற்பயிற்சி மையத்தில் வாக்கு சேகரித்தார்.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நியைில் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. ஆவடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான க.பாண்டியராஜன் அந்த தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வீதி, வீதியாக சென்று அ.தி.மு.க. அரசு திட்டங்களை கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்.
கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் செய்த திட்டங்களை கூறி அவர் வாக்கு கேட்டு வருவதால், அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் தொகுதியில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் மக்கள் கூடும் மார்க்கெட் பகுதி, பூங்காக்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
உடற்பயிற்சி நிலையத்தில்...
நேற்று காலை தென்றல் நகர் மற்றும் கோபாலபுரம் ஆகிய இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். அங்குள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று ஓட்டு கேட்டார்.
அப்போது அவர்கள், கொரோனா காலக்கட்டத்தில் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதல்-அமைச்சருடன் கலந்து பேசி தமிழகம் முழுவதும் உடற்பயிற்சி நிலையங்கள் திறப்பதற்கு உதவியதை நாங்கள் மறக்கமாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதற்கு மாபா க.பாண்டியராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.