திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி 2 சிறுவர்கள் மாயம்

திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் ராட்சத அலையில் சிக்கியதில் மாயமாகினர்.

Update: 2021-03-30 00:53 GMT
திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் விம்கோ காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணத்துரை. இவரது மகன் நவீன் (வயது 14). அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஜின்னா என்பவரின் மகன் உமர் (11). 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவர்கள் 2 பேரும், அதே பகுதியை சேர்ந்த ஜெய் கணேஷ் உள்ளிட்ட 4 பேருடன் திருவொற்றியூர் கே.வி.கே.குப்பம் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடலில் தோன்றிய ராட்சத அலையில் சிறுவர்கள் நவீன் மற்றும் உமர் இருவரும் சிக்கி கொண்டனர்.

தேடும் பணி

இதையடுத்து அவர்களை அலை கடலுக்குள் இழுத்துச் சென்றதை பார்த்து, கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்களும் பீதியில் அலறினர். உடனே அவர்கள் ஓடி சென்று அருகில் இருந்த மீனவர்களை அழைத்து வந்தனர். மீனவர்கள் விரைந்து வந்து கடலில் குதித்து 2 பேரையும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ரப்பர் படகு மூலம் மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்