எண்ணெய் வித்துக்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்வேன்; விருதுநகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாண்டுரங்கன் உறுதி
விருதுநகர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பாண்டுரங்கன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.;
கிராம பகுதியிலும் நகர் பகுதியிலும் அவர் வாக்காளர்களை சந்தித்து தனக்கு ஆதரவு தருமாறு கேட்டு வருகிறார். அவருடன் அ.தி.மு.க. அவைத் தலைவர் எஸ் ஆர் விஜயகுமரன் ஒன்றிய செயலாளர் கேகே.கண்ணன் தர்மலிங்கம் ராஜசேகர் நகர செயலாளர் முகம்மது நயினார் முன்னாள் நகர சபை தலைவர் சாந்தி மாரியப்பன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் நாகசுப்பிரமணியம் உள்ளிட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் பா.ஜ.க. நிர்வாகிகளும் செல்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர் பாண்டுரங்கன் தெரிவித்ததாவது
எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் கொரோனா பாதிப்பால் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில் அவர்கள் வாழ்வாதாரம் பெருக எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என வியாபார தொழில்துறை சங்க தலைவர் வலியுறுத்தி உள்ளார். எனக்கு வாய்ப்பு தரும பட்சத்தில் மத்திய அரசிடம் எண்ணெய் வித்துக்களை இறக்குமதி செய்வதை தடை செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் மேலும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம்
பயிர் கடன் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வேளாண் விற்பனை குழு மூலம் விவசாயிகளின் உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வது உடன் அங்கு உள்ள கிட்டங்கிகளில் குறைந்த வாடகையில் விலை கிடைக்கும் பொழுது விற்பனை செய்து லாபம் அடைய தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு விவசாயத்துறை மூலம் விவசாயிகளுக்கு உதவிட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் கலந்தாய்வு செய்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் கிடைப்பதில் சில பிரச்சனைகள் உள்ளதாக தெரியவருகிறது. எனவே இனிவரும் காலங்களில் எமது பிரச்சினைகள் இல்லாமல் விவசாயிகள் விவசாயத்துறை அதிகாரியிடம் கலந்தாய்வு செய்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பெற்றிடவும் அதன் வழியே பயிர் சாகுபடி செய்து உரிய லாபம் பெற்றிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது இழப்பீட்டு தொகை பாரபட்சமில்லாமல் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தொடர் வறட்சி காரணமாக பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கும் பேரிடர் காலங்களில் மத்திய மாநில அரசுகளின் துறைகள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மானாவாரி விவசாயத்தை நம்பியுள்ள இம்மாவட்டத்தில் பயிர் சாகுபடி அதிகரித்திட பயிர் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரிக்க உறுதுணையாக இருப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.