நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை; கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வாக்குறுதி

நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்பேன் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் வாக்குறுதி அளித்துள்ளார்.

Update: 2021-03-30 00:00 GMT
காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலையில் மாற்று கட்சியினர் காங்கிரசில் இணைந்த போது எடுத்த படம்.
வாக்கு சேகரிப்பு 
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகுமார் என்ற விஜய் வசந்த் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதோடு சமுதாய தலைவர்கள், ஊர் தலைவர்கள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக கிள்ளியூர், குளச்சல் ஆகிய சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் இணைந்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் நேற்று விளவங்கோடு சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியுடன் இணைந்து விஜய் வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குழித்துறை பாலவிளை பகுதியில் திறந்த வாகனத்தில் சென்றும், வீதி வீதியாக நடந்து சென்றும் கை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார். மேலும் வியாபாரிகள், கடைக்காரர்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்குகளை சேகரித்தார். 

பின்னர் அவர் பேசியபோது கூறியதாவது:-

அடிமை ஆட்சி 
குமரி மாவட்டத்தில் 6 சட்டசபைகளுக்கும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. நடைபெற உள்ள சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் மிகவும் முக்கியமானது ஆகும். தமிழகத்தில் அடிமை ஆட்சியில் இருந்து மீட்டெடுக்கும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும். புதிய எழுச்சியை தரும் தேர்தலாக இருக்கும். எனவே மதசார்பற்ற கூட்டணிக்கு வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றி பெறச்செய்ய வேண்டும். மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சர் ஆக்கினால் தமிழகத்துக்கு மட்டும் அல்லாது குமரி மாவட்டத்துக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும்.விளவங்கோடு சட்டசபை தொகுதி இயற்கை வளம் நிறைந்த தொகுதியாக உள்ளது. இங்கு ரப்பர் தொழிற்சாலை அமைக்கவும், ரப்பர் பூங்காக்கள் ஏற்படுத்தவும், தொழில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். நெய்யாறு இடதுகரை கால்வாயில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் கேரள அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. இதன் காரணமாக 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் எனக்கு வெற்றி வாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் என்னுடைய முதல் குரலாக நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுப்பேன். இதற்காக எனக்கு கை சின்னத்தில் வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாற்றுக்கட்சியினர் 
முன்னதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஜய்வசந்த் முன்னி லையில் மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.

மேலும் செய்திகள்