வளர்ச்சி திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்; கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் தளவாய்சுந்தரம் பிரசாரம்
வளர்ச்சி திட்டங்கள் தொடர அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் தளவாய்சுந்தரம் தேர்தல் பிரசாரம் செய்தார்.;
தளவாய்சுந்தரம் பிரசாரம்
கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக தளவாய்சுந்தரம் போட்டியிடுகிறார். அவர் கன்னியாகுமரி தொகுதி முழுவதும் கிராமம், கிராமமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவர் நேற்று தடிக்காரன்கோணம், இந்திரா நகர், காமராஜர் நகர், பால்குளம் வாழையத்துவயல், கீரிப்பாறை உள்பட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வளர்ச்சியை ஏற்படுத்தி விட்டு...
தடிக்காரன்கோணம் பகுதியில் சாலைகள் சரியாக இல்லை என்று இந்த பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். இந்த சாலையை சீரமைப்பதற்கான வேலையை எடுத்த ஒப்பந்ததாரர் வேலையை செய்யாமல் தேர்தல் நேரத்தில் கிடப்பில் போட்டு உள்ளார். அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று 30 படுக்கை வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் பல்வேறு விதமான வளர்ச்சியை ஏற்படுத்தி விட்டு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
அதிக வாக்குகள்
அரசு ரப்பர் கழகம் நஷ்டத்தில் இயங்கி வந்த போதிலும் தொழிலாளர்கள் நலன் கருதி நஷ்டத்தை நிவர்த்தி செய்து இயக்கி வருகிறோம். கடந்த 2001-ம் ஆண்டு தேர்தலில் இந்த பூத்தில் எனக்கு அதிக வாக்குகளை அள்ளிக் கொடுத்தீர்கள். அதே போல இந்த தேர்தலிலும் வாக்குகளை அள்ளித்தர வேண்டும்.மேலும் தடிக்காரன்கோணத்தில் உள்ள சந்தையை மேம்படுத்த இங்குள்ள ஒன்றிய கவுன்சிலர் மூலம் ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்
மக்கள் வரிப்பணத்தை மக்களுக்கு செலவு செய்யக்கூடிய ஒரே அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான். இந்த அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். எனவே இந்த சாதனைகளும் வளர்ச்சித் திட்டங்களும் தொடர நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக போட்டியிடும் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.
முன்னதாக அங்குள்ள தூய பனிமாதா ஆலயத்தில் பிரார்த்தனை செய்தார். பிரசாரத்தின்போது முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் பொன்.சுந்தர்நாத், தோவாளை ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பரமேஷ்வரன், மேரிஜாய், ஜெரோம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.