பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சம்- 4 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சம், 4 லட்சம் மதிப்பிலான நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
பவானிசாகர், அந்தியூர், பெருந்துறை பகுதியில் நடந்த வாகன சோதனையில் ரூ.7 லட்சம், 4 லட்சம் மதிப்பிலான நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தமிழகத்தில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க நியமிக்கப்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சரவணன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பசுவாபாளையம் அருகே நேற்று மதியம் 12.45 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
பணம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் நொக்கனூர் நடுவீதியை சேர்ந்த ராஜா (35) என்பதும், விவசாயியான இவர் கோவையில் பூண்டு வாங்கிவிட்டு மீதி பணத்தை ஊருக்கு கொண்டு சென்றதும், அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரியவந்தது. இதனால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, சத்தியமங்கலம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தியூர்
இதேபோல் அந்தியூர் பள்ளிபாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகேசன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி பகுதியில் இருந்து வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரூ.2 லட்சத்து 13 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து டிரைவரிடம் விசாரித்ததில் அவர் கோனேரிப்பட்டியை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் (60) என்பதும், விவசாயியான இவர் அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் விவசாய தோட்டத்துக்கு தேவையான குழாய்கள் வாங்குவதற்காக பணத்தை எடுத்துச்சென்றதும், அதற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தியூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி இளங்கோவிடம் அந்தியூர் தாசில்தார் வீரலட்சுமி, அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூரில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குன்னத்தூர் பெருமாநல்லூர் ரோட்டைச்சேர்ந்த நகை செய்யும் தொழிலாளி விஜயபாஸ்கர் என்பவரிடம் சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவரிடம் 106 கிராம் எடையுள்ள, ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் இருந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நகைகளை பறிமுதல் செய்து அதை பெருந்துறை தொகுதி தேர்தல் அதிகாரி இலாகிஜானிடம் ஒப்படைத்தார்கள்.
ரூ.1½ லட்சம்
இதேபோல் அந்த வழியாக வாகனங்களில் வந்த முகாசி பிடாரியூரைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரிடம் ரூ.65 ஆயிரமும், காஞ்சிக்கோவில் பகுதியில் நடந்த சோதனையில் கவுந்தப்பாடி அய்யன்காடு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம் ரூ.87 ஆயிரத்து 500-ம் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தொகுதி தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் முறையான ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுத்தருமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் அறிவுறுத்தினார்.