மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல் கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலி
கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலி
கடலூர்,
பண்ருட்டி அருகே உள்ள ஏ.புதூரை சேர்ந்தவர் சாந்தப்பன். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 20). இவர் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் சந்தோஷ்குமார், காடாம்புலியூரை சேர்ந்த தனது நண்பர் ராஜசேகர் (20) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கடலூர் செம்மண்டலம் அருகில் சென்ற போது, பின்னால் வந்த அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பஸ்சில் பின்பக்க சக்கரம் சந்தோஷ்குமார் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜசேகர் லேசான காயத்துடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.