கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
கொடைக்கானலில் பெய்த மழையால் அஞ்சுவீடு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
கொடைக்கானல்:
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு நிலவும் சீதோஷ்ண சூழலை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அதற்கேற்றாற்போல் நகரில் அவ்வப்போது மழை பெய்து, சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.
இந்தநிலையில் நகர் பகுதியில் நேற்று மதியம் சுமார் 1 மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடைக்கானலில் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் காணப்படுகிறது.