4 தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி
ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2 ஆயிரத்து 945 பேரிடம் 4 தொகுதிகளில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
ராமநாதபுரம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பட்டியல் தயாரித்து அவர்களிடம் தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளதா என படிவம் கொடுத்து ஒப்புதல் வாங்கப்படும்.
அதன் அடிப்படையில் வாக்களிக்க படிவம் தயார் செய்து தாசில்தார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அந்த வாக்காளரின் வீடுகளுக்கே நேரில் சென்று அவரிடம் வாக்களிக்கும் படிவம் வழங்கி வாக்களிக்க வைத்து அதனை வாக்காளர் கண் முன்னே பெட்டியில் போட்டு மூடி சீல்வைத்து அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைப்பார்கள். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவடானை, முதுகுளத்தூர் ஆகிய தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்து கடந்த 3 நாட்களாக அந்த பணி நடைபெற்று வருகிறது. வரும் 31-ந் தேதி வரை இந்த பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விருப்பம் தெரிவித்தவர்களின் அடிப்படையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 548 பேரும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 234 பேரும் என மொத்தம் 782 பேர் உள்ளனர். பரமக்குடி தனி தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 496 பேரும், மாற்றுத்திறனாளிகள் 184 பேரும் என மொத்தம் 680 பேர் உள்ளனர். முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 530 பேரும், மாற்றுத்திறனாளிகள் 185 பேரும் என மொத்தம் 715 பேர் உள்ளனர். திருவாடானை தொகுதியில் 80 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் 601 பேரும், மாற்றுத்திறனாளிகள் 167 பேரும் என மொத்தம் 768 பேர் உள்ளனர். ஆக மொத்தம் 4 தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 ஆயிரத்து 175 பேரும், மாற்றுத்திறனாளிகள் 770 பேரும் என 2 ஆயிரத்து 945 பேர் விருப்பம் தெரிவித்து வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தினமும் 5 பேர் கொண்ட குழுவினர் மூலம் வாக்களிக்க வைத்து அதனை பாதுகாப்பாக வாங்கி வருகின்றனர். இதுதொடர்பான தினசரி அறிக்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தபால் வாக்குகள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை அன்று பத்திரமாக கொண்டு சென்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்படும்.