விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2021-03-29 17:53 GMT
விழுப்புரம், 


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடக்கிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 2-ந் தேதி எண்ணப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 2,368 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.


செஞ்சி தொகுதியில் 13 வேட்பாளர்களும், மயிலம் தொகுதியில் 14 வேட்பாளர்களும், திண்டிவனம் தொகுதியில் 15 வேட்பாளர்களும், வானூர் தொகுதியில் 7 வேட்பாளர்களும், விழுப்புரம் தொகுதியில் 25 வேட்பாளர்களும், விக்கிரவாண்டி தொகுதியில் 14 வேட்பாளர்களும், திருக்கோவிலூர் தொகுதியில் 14 வேட்பாளர்களும் ஆக மொத்தம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

 இதில் அதிகபட்சமாக விழுப்புரம் தொகுதியில் 25 பேர் போட்டியிடுவதால் இத்தொகுதியில் மட்டும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களான பேலட் யூனிட் 2-ம் கட்டுப்பாட்டு எந்திரமான கன்ட்ரோல் யூனிட், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வி.வி.பேட் கருவி ஆகியவை தலா ஒன்றும் வைக்கப்படும்.

சின்னங்கள் பொருத்தும் பணி

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்கள் பொருத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படத்துடன் கூடிய சின்னங்களை பொருத்தும் பணி நேற்று நடைபெற்றது.

 இப்பணியில் தேர்தல் அலுவலக ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோல் மற்ற 6 தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

இந்த பணியை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பொது பார்வையாளர்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அவ்வப்போது பார்வையிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்