விழுப்புரம் அரசு மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதற்கு எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அரசு மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2021-03-29 23:12 IST
விழுப்புரம், 


விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனை முழுக்க, முழுக்க கொரோனா வைரசால் பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் மாற்றியமைக்கப்பட்டது. 

அதன்பிறகு அங்கு செயல்பட்டு வந்த உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றியமைக்கப்பட்டது. 

கொரோனா மருத்துவமனையாக மாற்றம்

இதனிடையே தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி முதல் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுடன் அரசு பொது மருத்துவமனையாக செயல்பட தொடங்கியது. 

தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், விழுப்புரம் அரசு மருத்துவமனை நேற்று முதல் மீண்டும் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அங்கு செயல்பட்டு வந்த புறநோயாளிகள் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

சாலை மறியல்

இதையறிந்ததும் விழுப்புரம் நகர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை 6.45 மணியளவில் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

அப்போது விழுப்புரம் அரசு மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது பொதுமக்கள் கூறுகையில், தற்போது இம்மருத்துவமனையை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றியதால் சாதாரண காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டால் முண்டியம்பாக்கம் செல்வது மிக சிரமமாக உள்ளது. முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டும், பொது வார்டும் இருப்பதுபோன்று விழுப்புரத்திலும் பொது வார்டு ஏற்படுத்த வேண்டும்.

 விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வசதி இல்லாவிட்டாலும் அதன் அருகிலேயே பொது வார்டு வசதியை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் என்று முறையிட்டனர். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், இரவு 7.55 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்