விழுப்புரம்- செஞ்சி பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல்

விழுப்புரம்- செஞ்சி பகுதியில் உரிய ஆவணம்இன்றி கொண்டு சென்ற ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-03-29 17:39 GMT
விழுப்புரம், 


விழுப்புரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் நாராயணன் தலைமையிலான குழுவினர் நேற்று விழுப்புரம் பானாம்பட்டு பாதை அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை சந்தேகத்தின்பேரில் வழிமறித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் ரூ.73,060 ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த லீலாமேத்தா (வயது 52) என்பது தெரிந்தது. இந்த பணத்தை வியாபாரம் விஷயமாக கொண்டு செல்வதாக அவர், அதிகாரிகளிடம் கூறினார். இருப்பினும் அதற்கான உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

செஞ்சி

இதேபோல் செஞ்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் குணசேகரன் தலைமையிலான குழுவினர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அதில் வந்த வேலந்தாங்கல் புதூரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (38) என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் இருந்தது.
விசாரணையில் ஆரோக்கியராஜ் கூறுகையில், தான் வேலந்தாங்கல்புதூரில் வீடு கட்டி வருவதாகவும், அதற்காக செஞ்சியில் இருந்து பணம் கொண்டு செல்வதாகவும் கூறினார். இருப்பினும் அதற்கான உரிய ஆவணம் ஏதும் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து செஞ்சி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்