குற்றச்சம்பவங்களை தடுக்க அனைத்து சாலைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும் தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பிரசாரம்

மதுரை வடக்கு சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி தொகுதி முழுவதும் தீவிர சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

Update: 2021-03-29 18:30 GMT
மதுரை,

ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று கோ.தளபதி 44வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர். பிரசாரத்தின் போது கோ.தளபதி பேசியதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சர் ஆவது உறுதி. எனவே நாங்கள் அளிக்கும் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன். வடக்கு தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவதே எனது லட்சியம். மக்களுக்கு சேவை செய்யவே தேர்தலில் போட்டியிடுகிறேன். 
மதுரை மண்ணின் மைந்தனான நான் வடக்கு தொகுதி மக்களின் பிரச்சினைகளை நன்கறிவேன். அவை அனைத்தையும் தீர்த்து வைப்பேன் என உறுதி தருகிறேன். இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லை. எனவே அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தர நடவடிக்கை எடுப்பேன். குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி, பாதாள சாக்கடை போன்ற அடிப்படை பணிகள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வேன். 

நீர் மட்டத்தை உயர்த்த நீர்நிலைகளை தூர்வாரி சீரமைப்பேன். அனைத்து வார்டுகளிலும் இசேவை மையங்கள், சமுதாய கூடங்கள்,  நூலகங்கள், அங்கன்வாடி மையங்கள் அமைத்து தருவேன். போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டி தருவேன். கைத்தறி நெசவாளர்கள் நல வாரியம் அமைத்து தரப்படும். 
நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். மழை காலங்களில் நெசவாளர்களுக்கு உதவித்தொகை பெற்றுதரப்படும். 

கால்வாய் செல்லும் பகுதிகளில் இருபுறமும் தடுப்பு சுவர் கட்டி தரப்படும். அதில் நடைபாதை அமைக்கப்படும். வடக்கு தொகுதியில் உள்ள அனைத்து சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும். அதில் உள்ள காலிபணியிடங்கள் நிரப்ப்படும். குற்றசம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் அனைத்து சாலை மற்றும் முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படும்.  இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின் போது பொன்.சேது, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் காமராஜர் ஆகியோர் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்