துறையூர் சட்டமன்ற தொகுதியை முன்னோடி தொகுதியாக மாற்றுவேன் அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி வாக்குறுதி

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களின் நலனை எப்போதும் பாதுகாப்பவர்கள்.

Update: 2021-03-29 14:08 GMT
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் தனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் இந்திராகாந்தி துறையூர் பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களின் நலனை எப்போதும் பாதுகாப்பவர்கள். ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், உங்களில் ஒருவராக இருந்து உங்களின் துயர்துடைக்க, பல்வேறு நலத் திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி உள்ளார்கள். அதுமட்டுமின்றி தற்போது தேர்தல் வாக்குறுதியாக பெண்கள் அதிக அளவில் பயன் பெறக்கூடிய வகையில் ஆண்டுக்கு 6 சமையல் கியாஸ் சிலிண்டர்கள், சூரிய சக்தியில் இயங்கக்கூடிய அடுப்பு, வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை என்று பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழக அரசிடமிருந்து துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுக் கொடுத்துள்ளேன். குறிப்பாக பச்சைமலையில் மலைவாழ் மக்களுக்காக சாலை வசதியை மேம்படுத்தி கொடுத்து உள்ளேன். உப்பிலியபுரம் பகுதியில் அரசு அறிவித்த பல்வேறு நலத்திட்டங்களை அரசிடமிருந்து பெற்று செயல்படுத்தி உள்ளேன். தற்போது மீண்டும் துறையூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறேன்.நான் உங்களில் ஒருவனாக பணியாற்ற, மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை விட துறையூர் சட்டமன்ற தொகுதியை முன்னோடியான சட்டமன்ற தொகுதியாக மாற்றுவேன். முன்னதாக பஸ்நிலையத்தில் நின்ற பஸ்களில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் போது, உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் ராம்மோகன், பேரூராட்சி கழக செயலாளர் ராஜேந்திரன் உப்பிலியபுரம் நகர செயலாளர் ராஜாங்கம், துறையூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், முன்னாள் யூனியன் சேர்மன் மனோகரன், முன்னாள் அரசு வக்கீல் செந்தில்குமார், தொழில்நுட்ப பிரிவு முத்துக்குமார், கவி, சதீஷ் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்