தரங்கம்பாடி-மயிலாடுதுறை ரெயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன் அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வாக்குறுதி
என்னை வெற்றி பெற செய்தால் தரங்கம்பாடி-மயிலாடுதுறை ரெயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என்று அ.தி.மு.க. வேட்பாளர் பவுன்ராஜ் வாக்குறுதி அளித்துள்ளார்.
பொறையாறு,
பூம்புகார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளருமான பவுன்ராஜ் போட்டியிடுகிறார். அவர் எடுத்துக்கட்டி, திருக்களாச்சேரி, மடப்புரம் உள்ளிட்ட செம்பனார்கோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்கு மடப்புரம் ஊராட்சியில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாடு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். அத்துடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு வாஷிங்மிஷின் வழங்கப்படும். சூரிய சக்தி மின் அடுப்பு வழங்கப்படும். மின் இணைப்புக்கு பதிவு செய்த விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும். ஏழை எளிய பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். நான் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ளேன்.
மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு தந்து என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். விட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுவேன் நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நிற்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மீனவர்கள் பள்ளி கல்லூரி மாணவ -மாணவிகள் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறி வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி- மயிலாடுதுறை ரெயில் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார். அப்போது அவருடன் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.