நீர் நிலைகளை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவேன்; தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி பிரசாரம்
மதுரை வடக்கு சட்டசபை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ.தளபதி தொகுதி முழுவதும் தீவிர சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதே போல் அவரை தினமும் பல்வேறு தரப்பினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர் செல்லும் இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து பூ தூவி வரவேற்பு கொடுத்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தப்படி உள்ளனர். அவர் செல்லும் இடங்களில் பெண்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நேற்று கோ.தளபதி 47வது வார்டுக்கு உட்பட்ட டி.ஆர்.ஓ.காலனி, பள்ளிவாசல் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட£ர். அப்போது தொண்டர்கள் சிலர் கிரேன் மூலம் மிகப்பெரிய மாலை அணிவித்து தளபதியை வரவேற்றனர்.
பிரசாரத்தின் போது கோ.தளபதி பேசியதாவது:
மதுரை வடக்கு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் குடிநீர் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. காற்று தான் வருகிறது. அதற்கு முக்கிய காரணம், இங்குள்ள நீர் தேக்க தொட்டிகளில் முழுமையாக தண்ணீர் ஏற்ற முடியவில்லை. நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முயற்சித்தால் குழாய் வெடித்து விடுகிறது. பல ஆண்டுகளாக இருக்கும் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வில்லை. அது குறித்து அரசும், மாநகராட்சியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் இந்த நிலைமை இனி மாறிவிடும். மு.க.ஸ்டாலின் முதல்அமைச்சராக பொறுப்பேற்றவுடன்
அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியவத்துவம் கொடுத்து செயலாற்றப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி வடக்கு தொகுதியில் முதன்மை பிரச்சினையாக இருக்கின்றன குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். இங்குள்ள அனைத்து நீர் தேக்க தொட்டிகளிலும் முழுமையாக தண்ணீர் ஏற்றி சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். அதுமட்டுமின்றி மதுரை வடக்கு தொகுதியில் இருக்கின்றன செல்லூர், வண்டியூர் உள்பட பல கண்மாய்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கப்படும். அதன்மூலம் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதிகளவில் உயரும். தண்ணீர் பிரச்சினை இருக்காது.