சிவகாசியில் தொழிற்பூங்கா கொண்டு வருவேன்; காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் பிரச்சாரம்

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் அசோகன் கடந்த சில நாட்களாக தொகுதியின் பல்வேறு பகுதியில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

Update: 2021-03-29 02:00 GMT
இந்த நிலையில் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட முல்லைநகர், பொதிகைநகர், கந்தபுரம் காலனி, ஆயில்மில் காலனி, புதுகாலனி,பெரிய குளம் காலனி, தென்றல் நகர், ஐயப்பன் காலனி, பிள்ளையார்கோவில் பஸ் நிறுத்தம், செட்டி தெப்பம், நாடார் பிரஸ், பேராண்டாம்மாள் தெரு, பி.எஸ்.ஆர். ரோடு, எஸ்.எச்.என்.வி. பள்ளி, தட்டாவூரணி, ராணி அண்ணா காலனி, ஸ்ரீநகர், ஜெ.நகர், சிகாமணி காலனி, காளியப்பா நகர், ஜக்கமாள் கோவில், பெரியாண்டவர் காலனி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். பின்னர் மாலையில் சரஸ்வதி பாளையம், அய்யனார் காலனி, சசிநகர், காயாம்பு நகர், ராமசாமிபுரம் காலனி, சித்துராஜபுரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். 

அப்போது அவர் பேசியதாவது:
சிவகாசி நகராட்சியின் துணைத்தலைவராக நான் பதவி வகித்த காலத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து இருக்கிறேன். தற்போது சிவகாசியில் உள்ள பஸ் நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான இடத்தை பெற்று தந்தேன். இதே போல் நகரப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வாருகால் வசதிகள் இல்லாத நிலை இருக்கிறது. இந்த பிரச்சினையை சரிசெய்ய சிவகாசி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்து நவீன முறையில் கழிவுநீரை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த 10 ஆண்டுகளாக சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று கூறி வருகிறார்கள். நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டால் அதற்கான அதிகாரிகளை நேரில் சந்தித்து சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் மேம்பாலம் அமைக்க தேவையான நட வடிக்கை எடுக்கப்படும். அதே போல் சிவகாசி பகுதியில் உள்ள போக்கு வரத்து நெரிசலை குறைக்க நகரப்பகுதியை ஒட்டி சுற்று வட்டச்சாலை அமைக்க தேவையான நடவடிக்கையை எடுப்பேன். சிவகாசி பகுதியில் உள்ள படித்த இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர தொழில் பூங்காவை கொண்டு வர முயற்சி செய்வேன். இதன் மூலம் இந்த பகுதியை சேர்ந்த 10 ஆயிரம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். அதே போல் ஒவ்வொரு வீட்டுக்கும் தினமும் 5 லிட்டர் குடிநீர் வழங்குவேன். இதை முதலில் கிராமங்களில் இருந்து தொடங்குவேன். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சிவகாசி நகர்மன்ற முன்னாள் தலைவர்கள் சபையர் ஞானசேகரன், டாக்டர் கதிரவன் ஆகியோர் காங்கிரஸ் வேட்பாளர் அசோகனுக்கு வாழ்த்து தெரிவித்து பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்