குருத்தோலை ஞாயிறு: பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையையொட்டி பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் ஊர்வலம் நடந்தது.

Update: 2021-03-28 21:43 GMT
நெல்லை, மார்ச்:
குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

கிறிஸ்தவர்கள் இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் கடைசி வாரமாக குருத்தோலை ஞாயிறு அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதில் பாளையங்கோட்டை புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில், கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. அப்போது அவர்கள் ஓசன்னா பாடலை பாடிக் கொண்டு கையில் குருத்தோலை ஏந்தி சென்றனர்.
பாளையங்கோட்டை குழந்தை இயேசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பாளையங்கோட்டை யோவான் கல்லூரி வழியாக மீண்டும் புனித சவேரியார் ஆலயத்தில்  நிறைவடைந்தது. இதில் பாதிரியார்கள், குருக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். தவக்காலத்தின் தொடர்ச்சியாக பெரிய வியாழக்கிழமை வழிபாடு வருகிற 1-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது.

விக்கிரமசிங்கபுரம்-திசையன்விளை

விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தென்னிந்திய திருச்சபை ெநல்லை திருமண்டலம் விக்கிரமசிங்கபுரம் சேகரம் தூய பேதுரு ஆலயத்தில் குருத்தோலை பவனி நடைபெற்றது. நேற்று காலை சேகர குருவான சத்திய நேசன் தலைமையில் விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்கு திடலில் இருந்து குருத்தோலை பவனி தொடங்கி, தூய பேதுரு ஆலயம் வரை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குருத்தோலை ஆராதனை நடைபெற்றது. 
திசையன்விளையில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு நேற்று காலை குருத்தோலை பவனி நடந்தது. அந்தோணியார் கெபியில் இருந்து புறப்பட்ட குருத்தோலை பவனி முக்கிய வீதி வழியாக சென்று உலக ரட்சகர் திருத்தலத்தை அடைந்தது. தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலியை பங்கு தந்தை ஜோசப் கிறிஸ்டியான் நடத்தினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்