முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு: ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்- சத்தியில் உருவபொம்மை எரிப்பு; மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்தது
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அ.தி.மு.க.வினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் ஆ.ராசா எம்.பி.யின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
ஈரோடு
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து அ.தி.மு.க.வினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சத்தியமங்கலத்தில் ஆ.ராசா எம்.பி.யின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது
கோபி- பவானி
தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க எம்.பி. ஆ.ராசா, தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கோபி பஸ் நிலையத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் ஆ.ராசா எம்.பி.க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் சத்தி- ஈரோடு மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பவானி அந்தியூர் பிரிவு சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பவானி நகர அ.தி.மு.க. செயலாளர் என்.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அந்தியூர்- கொடுமுடி
இதேபோல் தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி அந்தியூர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அந்தியூர் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கட்சியினர் ஊர்வலமாக அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆ.ராசா எம்.பி.யை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்தனர்.
கொடுமுடி புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டு ஆ.ராசா எம்.பி.க்கு எதிராக கோஷமிட்டனர்.
சத்தியமங்கலம்- மொடக்குறிச்சி
சத்தியமங்கலம் வாரச்சந்தை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு நகர செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென ஆ.ராசா எம்.பி. உருவ பொம்மை தீ வைத்து எரிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி நால் ரோட்டில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஆ.ராசா எம்.பி. கொடும்பாவியை அ.தி.மு.க.வினர் எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து சென்று அ.தி.மு.க.வினரை தடுத்து நிறுத்தி கூட்டத்தை கலைத்தனர்.
ஈரோடு
ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில், ஆ.ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்
இதேபோல் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் ஆ.ராசாவை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. பகுதி செயலாளர் ரா.மனோகரன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க.வினர் ஆ.ராசாவை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினார்கள்.