மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
போயம்பாளையத்தில்மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது
அனுப்பர்பாளையம்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6 ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் 100 சதவீத வாக்களிப்பு நடைபெறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், பொதுமக்கள் அச்ச்சமின்றி வந்து வாக்களித்து செல்லும் வகையில் மத்திய தொழில் பாதுபாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் அந்தந்த பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த நிலையில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போயம்பாளையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை திருப்பூர் மாநகர வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் தொடங்கி வைத்தார். போயம்பாளையம் 4 ரோடு சந்திப்பில் தொடங்கிய இந்த அணிவகுப்பு நஞ்சப்பாநகர், குருவாயூரப்பன் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போயம்பாளையத்தில் நிறைவடைந்தது. இதில் 100 க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.