அங்காள ஈஸ்வரிஅம்மன் கோவில் தீ மிதி திருவிழா

தஞ்சை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழாவையொட்டி அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2021-03-28 21:03 GMT
தஞ்சாவூர்;
தஞ்சை அங்காள ஈஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழாவையொட்டி அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீ மிதி திருவிழா 
தஞ்சை விளார்சாலை அண்ணாநகரில் அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர தீமிதி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து தினமும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்களா ஈஸ்வரி அம்மன், முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலையில் தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து அங்காள ஈஸ்வரி அம்மன் சிலை முன்செல்ல பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
நேர்த்திக்கடன் செலுத்தினர் 
இவர்களில் பலர் காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்று அண்ணாநகரில் உள்ள கோவில் திடலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமான பக்தர்கள் இறங்கினர்.
தீச்சட்டியை கையில் ஏந்தியபடியும், அலகு குத்தியபடியும், சிறுவர்களை தோளில் சுமந்தப்படியும் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாரதிராஜன், சீத்தாராமன் ஆகியோர் மேற்பார்வையில் தஞ்சை தெற்கு மற்றும் தாலுகா போலீசார் செய்து இருந்தனர். இன்று(திங்கட்கிழமை) பூச்சொரிதல், அம்மன் ஊஞ்சலாட்ட நிகழ்ச்சி, விடையாற்றி விழா நடக்கிறது.

மேலும் செய்திகள்