திருச்சி மேற்கு தொகுதியில் தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகார்: இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம்; சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகாரில் திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2021-03-28 21:00 GMT
திருச்சி,

தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகாரில் திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாக அலைந்து ஓட்டு கேட்டு வருகிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளும் திருச்சியில் ஆங்காங்கே தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

ரூ.1 கோடி சிக்கியது

இதில் கடந்த 23-ந் தேதி இரவு திருச்சி பெட்டவாய்த்தலை சோதனை சாவடி அருகே ரூ.1 கோடி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த சிவராசு, போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஸ்ரீரங்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

போலீசாருக்கு பணப்பட்டுவாடா

இந்தநிலையில் தேர்தல் பணியாற்றும் போலீசாருக்கு தபால் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதற்காக திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாரின் தபால் ஓட்டுக்களை பெறுவதற்காக அவர்களுக்கு கவரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கமிஷனர் லோகநாதன், மேற்குதொகுதிக்குட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார்.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை போலீஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.1½ லட்சம் சிக்கியது

அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த பீரோக்களில் பணத்துடன் கூடிய கவர்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் மொத்தம் ரூ.1½ லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்தந்த போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

6 போலீசார் பணியிடை நீக்கம்

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ் ஏட்டு சுகந்தி, அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

இவர்களில் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாமேரி ஆகியோர் சமீபத்தில் தான் தில்லைநகர், அரசு மருத்துவமனை போலீஸ்நிலையங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளனர். 

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, எழுத்தர் சுகந்தி, தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மணிவண்ணபாரதி உள்பட 5 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் எதிரொலியாக மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்து போலீசாரையும் கூண்டோடு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. திருச்சியில் தபால் ஓட்டுக்காக பணம் பெற்ற புகாரில் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இந்த சம்பவம் குறித்து தற்போது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முதல் விசாரணையை தொடங்கினர்.

மேலும் செய்திகள்