தமிழை அழித்து, இந்தியை திணித்து மத துவேசத்தை பரப்பும் வேலை தமிழகத்தில் நடக்காது; கோபியில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
தமிழை அழித்து இந்தியை திணித்து மத துவேசத்தை பரப்பும் வேலை தமிழகத்தில் நடக்காது என்று கோபியில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
ஈரோடு
தமிழை அழித்து இந்தியை திணித்து மத துவேசத்தை பரப்பும் வேலை தமிழகத்தில் நடக்காது என்று கோபியில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
குதிரை சந்தை
கோபியில் நேற்று பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வள்ளல் பாரி ஆட்சி செய்த கோபிசெட்டிபாளையம். குதிரை சந்தைக்கும், மாட்டு சந்தைக்கும் பிரசித்தி பெற்ற அந்தியூர், பவானி-காவிரி ஆறுகள் சந்திக்கும் கூடுதுறையை கொண்ட பவானி, சுதந்திரத்துக்கு பின்னர் கட்டப்பட்ட மிகப்பெரிய நீர்நிலையான பவானிசாகர் அணையை கொண்ட பவானிசாகர் என்று பெருமை மிக்க தொகுதிகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு உங்கள் வீட்டு பிள்ளையாக, உங்களில் ஒருவனாக ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்.
கைக்கட்டி நிற்கிறார்
உங்கள் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். மூத்த அமைச்சர் செங்கோட்டையன். வரும் ஆனா வராது என்ற வசனத்தை போல அவர் அமைச்சர்தான். ஆனால் அமைச்சர் இல்லை என்பது போல செயல்பட்டு வருபவர். மூத்த அமைச்சரான இவர் முன்பு கைகட்டி நின்றவர் பழனிசாமி. ஆனால் இப்போது பழனிசாமி முன்பு செங்கோட்டையன் கைக்கட்டி நிற்கிறார். அப்போது அவர் முன் கைக்கட்டி நின்றதற்காக இப்போது பழனிசாமி, அவரை பழிவாங்கிக்கொண்டு இருக்கிறார். இதற்கு ஆதாரம் உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து ஆகாது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். ஆனால், அடுத்த நாள் தேர்வு நடக்காது என்று முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் பள்ளிக்கூடங்கள் திறக்காது என்று அறிவித்தார். அடுத்த நாள் முதல்-அமைச்சர் பள்ளிக்கூடங்கள் திறக்கும் என்று அறிவித்தார். அதுமட்டுமல்ல, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் வெளியிடும் அறிக்கைகள் குறித்து கூட அமைச்சருக்கு தெரியாத நிலை உள்ளது.
காவித்துறை
பள்ளிக்கல்வித்துறையில் எந்த பணிகளையும் உருப்படியாக செய்ய முடியாமல் அவர் இருக்கிறார். நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கைகளை புகுத்தி கல்வித்துறை காவித்துறையாக மாறிக்கொண்டு இருக்கிறது. அதை கைக்கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர் செங்கோட்டையன். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்காதவர்.
எனவேதான் நமது தி.மு.க. ஆட்சி பதவி ஏற்றதும் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்படும். பணிமாறுதல் அனைத்தும் கலந்தாய்வு மூலம் நடத்தப்படும். கல்வித்துறையில் மட்டுமா? செங்கோட்டையன் அவர் தொகுதியில் கொடுத்த வாக்குறுதிகளை செய்து இருக்கிறாரா? என்றால் இல்லை.
அரசு கலைக்கல்லூரி
கடந்த 15 ஆண்டுகளாக அவர் கூறும் ஒரே வாக்குறுதி, கோபி நகரின் மையத்தில் இருக்கும் குப்பை கிடங்கு மாற்றப்படும் என்பது. ஆனால் செய்து இருக்கிறாரா... கீரிப்பள்ளம் ஓடையில் கான்கிரீட் போடும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து செய்யப்படவில்லை. ஈரோடு-கோபி-மைசூரு சாலை 4 வழியாக மாற்றப்படும் என்று 10 ஆண்டுகளாக கூறுகிறார்கள் செய்யப்பட்டதா...
கோபிக்கு ரூ.52 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்படவில்லை. இதுபோல் அரசு கலைக்கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி என்று அவர் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அவருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் பாடம் புகட்ட நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள். ஏப்ரல் 6-ந்தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
505 வாக்குறுதிகள்
மே 2-ந் தேதி தி.மு.க. ஆட்சியில் அமரும். நான் கலைஞரின் மகன், அவரைப்போல சொல்வதை செய்வேன். செய்வதைத்தான் சொல்வேன். அதன்படி தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள அனைத்தையும் நிறைவேற்றுவேன். இந்த தேர்தலுக்கு தமிழ்நாட்டின் அனைத்து பிரிவு மக்களையும் சந்தித்து கருத்து கேட்டு 505 வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையாக கொடுத்து இருக்கிறோம். நெசவாளர்கள் கூட்டுறவு வங்கி, இலவச வேட்டி-சேவை பணி, காஞ்சிபுரம் அண்ணா பட்டு வாரியம் திறப்பு, அரசு நூல் கொள்முதல் நிலையம், பட்டுநூல் தொழிலுக்கு கடன் உதவி, கைத்தறிக்கு 300 யூனிட் மின்சாரம், விசைத்தறிக்கு 1000 யூனிட் மின்சாரம், நெசவாளர்கள் வீட்டு மானியம் என்று பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பணி நியமனம்
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1,000-ம். நகர பேருந்துகளில் இலவச பஸ் பயணம். அரசு வேலைகளில் 40 சதவீ தம் பெண்களுக்கு ஒதுக்கீடு, கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி வரும் மருத்துவ உதவி திட்டம், பெட்ரோல் விலை ரூ.5 குறையும். டீசல் விலை ரூ.4 குறையும். கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
தி.மு.க. ஆட்சி வந்ததும் 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். நீர் நிலைகள் பாதுகாக்கும் பணியில் 75 ஆயிரம் இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள். சாலைகள், பாலங்கள் பாதுகாப்பில் 75 ஆயிரம் இளைஞர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள். அறநிலையத்துறையில் 25 ஆயிரம் பேர் திருக்கோவில் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.
நறுமணப்பொருள் ஆலை
மக்கள் நலப்பணியாளர்களாக 25 ஆயிரம் பெண்கள் நியமிக்கப்படுவார்கள். ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். கொரோனா காலத்தில் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். தமிழக அரசு ரூ.1000 வழங்கி உள்ளது. மீதி உள்ள ரூ.4 ஆயிரத்தை தி.மு.க. ஆட்சி மே 2-ந் தேதி அமைந்ததும், ஜூன் 3-ந் தேதி கலைஞர் பிறந்தநாளில் வழங்கப்படும். மாதம் தோறும் மின்சாரம் கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்.
அந்தியூர் தொகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். பவானியில் புறவழிச்சாலை உருவாக்கப்படும். கோபி அரசு ஆஸ்பத்திரி நவீனப்படுத்தப்படும். தாளவாடி, சத்தியமங்கலம், கடம்பூர், பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற அரசுப்பணியாளர்களுக்கு மலைப்பகுதி பணிப்படி வழங்கப்படும். சத்தியமங்கலத்தில் நறுமணப்பொருள் ஆலை கொண்டு வரப்படும். உள்ளாட்சிகளில் குப்பை வரி நீக்கப்படும். அதிக அளவில் நீர்ப்பாசன திட்டங்கள் கொண்டுவரப்படும். மணியாச்சி பள்ளம், வரட்டுப்பள்ளம், வழுக்குப்பாறை திட்டம் ஆகிறவற்றை ஒருங்கிணைத்து நீர்பாசன திட்டங்கள் உருவாக்கப்படும்.
7 உறுதிமொழிகள்
அடுத்து 5 ஆண்டுகளுக்கான திட்டங்கள் மட்டுமின்றி ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்று அறிவித்து 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு பார்வையுடன் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்கு கேட்கிறேன். அதுபோல முதல்-அமைச்சர் வேட்பாளராக எனக்கும் உங்கள் வாக்குகளை கேட்கிறேன். நான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றால் இந்த 4 வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்.
தமிழை அழித்து இந்தியை திணித்து மத துவேசத்தை பரப்பும் மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் நடக்காது. இது திராவிட மண். தந்தை பெரியாரின் மண். அண்ணாவின் மண். கலைஞர் பிறந்த மண். கலைஞரின் உடன்பிறப்புகள் என்று தமிழ் மக்களை அழைப்பார். உடன் பிறப்புகளாக இந்த தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.