அம்மாபேட்டை அருகே மினி லாரி மோதி வாலிபர் பலி: விபத்தை ஏற்படுத்திய டிரைவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரூ.6½ லட்சம் பறிமுதல்; தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

அம்மாபேட்டை அருகே மினி லாரி மோதி வாலிபர் ஒருவர் இறந்தார். உரிய ஆவணம் இல்லாததால் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவரிடம் ரூ.6½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-28 20:37 GMT
அம்மாபேட்டை,
அம்மாபேட்டை அருகே மினி லாரி மோதி வாலிபர் ஒருவர் இறந்தார். உரிய ஆவணம் இல்லாததால் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவரிடம் ரூ.6½ லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விபத்தில் வாலிபர் சாவு
அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டையை அடுத்துள்ள சொட்டையனூரைச் சேர்ந்தவர் அம்மாசை. இவருடைய மகன் திருமுருகன் (வயது 25). திருமணம் ஆகவில்லை. பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்து திருமுருகன் மோட்டார்சைக்கிளில் கோனேரிப்பட்டி பிரிவு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். பவானி ரோட்டில் ஆனந்தம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக திருமுருகனின் மோட்டார்சைக்கிள் மீது மோதியதுடன், ரோட்டோர புளியமரத்தில் மோதி நின்றது.
இதில் மினி லாரியின் சக்கரத்தில் சிக்கி திருமுருகன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விைரந்து சென்று திருமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.6½லட்சம் பறிமுதல்
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை அம்மாபேட்டை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சரவணன் (வயது 40) என்பது தெரியவந்தது. மேலும் சோதனையில் அவரது லாரியில் ரூ.6½ லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினரை வரவழைத்தனர். அவர்கள் சரவணனிடம் நடத்திய விசாரணையில் அவர் கரூரில் நிலக்கடலையை விற்றுவிட்டு அதற்கான பணத்தை கொளத்தூருக்கு கொண்டு சென்றது தெரியந்தது. ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு, பவானி தொகுதி தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்