பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு தேரோட்டம்
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம்
மயிலாடுதுறையை அடுத்த திருவிழந்தூரில் பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் 22-வது திவ்யதேசமும், பஞ்ச அரங்கங்களில் 5-வது அரங்கமுமான இந்த கோவிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
உற்சவத்தின் 9-ம் திருநாள் உற்சவமான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமள ரெங்கநாதர் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிந்தா... பரிமள ரெங்கநாதா... நாராயணா... என பக்தி கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள், தங்கள் வீடுகளின் முன்பு தேர் வந்த போது வழிபாடு நடத்தினர்.
இந்த தேர்நான்கு விதிகளையும் சுற்றி வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தொடர்ந்து மதியம் பெருமாள், காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.