கல்லல், காளையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட சில குக்கிராமங்களில் பெட்டிக்கடைகளில் மது பாட்டில் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. மதுபான கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகின்றன. இதனால்இங்குள்ள சில கிராமங்களில் மதுபாட்டில்கள் பெட்டிக்கடையில் வைத்து எந்த நேரத்திலும் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் ஆண்கள் தினந்தோறும் வேலைக்குச் செல்லும் முன்னரே காலை வேளையில் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் உள்ளதாக பெண்கள் புலம்புகின்றனர். பகல் 12 மணிக்கு மேல் மதுபானக்கடைகள் திறப்பதனால் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுவிட்டு வரும்பொழுது மதுபான கடைக்கு சென்று வருவார்கள். தேர்தல் நேரத்தில் மதுக்கடைகள் மூடப்படும் என்பதால் பெட்டிக்கடையில் அதிக அளவு மதுபாட்டில்கள் விற்கப்படும். எனவே அந்தந்த பகுதி போலீசார் கிராமங்களில் ரோந்து சென்று சட்டவிரோதமாக மது விற்பனையை தடுக்க முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.