11 மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேர் கைது
கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 11 மோட்டார் சைக்கிள்திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வேப்பூர் அருகே ஆவட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர்.
பின்னர் அந்த காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், தஞ்சாவூரை சேர்ந்த கருப்பையா மகன் சரவணன் என்கிற சரவணக்குமார் (வயது 32), திருமயம் துளையானூர் பெரிய கள்ளுவயல் பழனியப்பன் மகன் சிவா என்கிற சிவராஜன் (31), ஒரத்தநாடு தந்தோணி இளங்கோவன் மகன் சதீஷ்குமார் (31) ஆகிய 3 பேர் என்று தெரிய வந்தது.
கைது
தொடர்ந்து அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதில், அவர்கள் 3 பேரும் காரில் சென்று, திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர் மற்றும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 11 மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டனர்.
இரவு நேரங்களில் காரில் சென்று நோட்டமிட்டு, வீட்டுக்கு வெளியே நிற்கும் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் டெல்டா போலீசார் வேப்பூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 11 மோட்டார் சைக்கிள்களையும், திருடுவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
கைதான 3 பேர் மீதும் பல்வேறு மாவட்டங்களில் கொலை மற்றும் திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.