பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்
பங்குனி உத்திரத்தையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.;
ராமேசுவரம்,
பங்குனி உத்திரத்தையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோடி தீர்த்தம்
ராமேசுவரம் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி நேற்று பகல் 12 மணி அளவில் விசுவநாதர் சன்னதி முன்பு 1008 சங்கு வைக்கப்பட்டு அதில் கோடி தீர்த்தம் ஊற்றப்பட்டது. பின்னர் கருவறையில் உள்ள ராமநாத சாமிக்கு சங்காபிேஷகம் பூஜை நடைபெற்றது. 1008 சங்காபிஷேக பூஜையில் கோவிலின் பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ராமேசுவரம் கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும்போது சங்கின் மையப்பகுதியில் அபூர்வ திரிசங்கு மற்றும் தங்க குடம் வைக்கப்பட்டு அதன்மூலம் சாமிக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தங்க குடம் மற்றும் அபூர்வ திரிசங்கும் அபிஷேகத்திற்கு வைக்கப்படாமல் இருந்தது பக்தர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நடராஜபுரம், ராமகிருஷ்ணா புரம், புதுரோடு, சுனாமி குடியிருப்பு, சம்பை, மாங்காடு, ஏரகாடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண் மற்றும் பெண் பக்தர்களும் மற்றும் சிறுவர்களும் சுமார் 2 அடி முதல் 40 அடி நீளம் வரையிலான வேலை வாயில் குத்தியபடி கோவில் ரதவீதி சாலையை சுற்றியபடி வந்து மேலவாசல் முருகன் சன்னதியில் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
ஏற்பாடு
அப்போது ஏராளமான பக்தர்கள் நூதன முறையில் பலவிதமான பறவை காவடிகளை எடுத்து வந்தும் பால்குடம், கரகம் உள்ளிட்ட பலவிதமான நேர்த்திக் கடன்களையும் செலுத்தினர். பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரையிலும் மேலவாசல் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் மற்றும் உறுப்பினர்களும் திரளானோர் கலந்துகொண்டு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ராமேசுவரம் திட்டக்குடி முதல் மேலவாசல் மற்றும் கோவிலின் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.