போர்வையால் கழுத்தை இறுக்கி வாலிபரை கொன்று தூக்கில் தொங்க விட்டனர்
கீழ்வேளூர் அருகே போர்வையால் கழுத்தை இறுக்கி வாலிபரை கொன்று தூக்கில் தொங்க விட்ட கள்ளக்காதலிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே போர்வையால் கழுத்தை இறுக்கி வாலிபரை கொன்று தூக்கில் தொங்க விட்ட கள்ளக்காதலிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூக்கில் வாலிபர் பிணம்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள செருநல்லூர் மேலத்தெரு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தூக்கில் தொங்கியவர் யார்? என்று விசாரணை நடத்தினர்.
போலீசாரின் விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் கீழ்வேளூர் அருகே உள்ள காக்கழனி காலனி தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் அய்யப்பன்(வயது 22) என்பது தெரியவந்தது.
பரபரப்பு தகவல்கள்
அய்யப்பன் தூக்கில் தொங்கியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவீர விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.
இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-
2 பெண்களிடம் கள்ளத்தொடர்பு
செருநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஆனந்தன் மனைவி ரஜிபாணி(34) மற்றும் அன்பரசன் மனைவி கவுதமி (26) ஆகிய இருவரும் உறவினர்கள். ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரிடமும் அய்யப்பன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு வைத்து வந்துள்ளதாக தெரிகிறது.
இதை அய்யப்பன் குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் இந்த கள்ள தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு மதுகுடித்து விட்டு ரஜிபாணி வீட்டிற்கு வந்த அய்யப்பன் ரஜி பாணியுடன் தகராறில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கழுத்தை நெரித்துக்கொன்று
தூக்கில் தொங்க விட்டனர்
இந்த தகராறு உச்சக்கட்டம் அடைந்த நிலையில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து போர்வையால் அய்யப்பனின் கழுத்தை இறுக்கியுள்ளனர்.
இதில் மயங்கிய நிலையில் இருந்த அய்யப்பனை ரஜி பாணி வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமரத்தில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து தூக்கு மாட்டி தொங்க விட்டுள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2 பெண்கள் கைது
இது குறித்து அய்யப்பனின் தந்தை தட்சிணாமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ரஜிபாணி, கவுதமி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.