முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடையெடுத்த பக்தர்கள்
முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் கையால் வடையெடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த பிள்ளையார்குப்பம் கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 37-ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது.
இதையொட்டி காலை 8 மணிக்கு சாமிக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு காவடி ஊர்வலமும், 12 மணிக்கு செடல் உற்சவமும், 12.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் நெகிழ்ச்சி
அதன் பின்னர் பக்தர்கள் சிலர் தங்களது தாடையில் அலகு குத்திக்கொண்டு கொதிக்கும் எண்ணெயில் வடைபோட்டு சிறிது நேரத்தில் அந்த வடைகளை எண்ணெய் சட்டியில் இருந்து கையாலேயே எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதை பார்த்ததும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மிகுந்த நெகிழ்ச்சியடைந்தனர்.
பின்னர் இந்த வடைகள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு தெருக்கூத்து நிகழ்ச்சியும், 11 மணிக்கு சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.