விழுப்புரத்தில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி
விழுப்புரத்தில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி சென்றனா்.
விழுப்புரம்,
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பாடல்களை பாடினர்.
இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுக்கிறது. இதையொட்டி குருத்தோலை பவனி நடைபெறும். ஏசு உயிர்த்தெழும் பண்டிகையான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறையொட்டி விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜேம்ஸ் ஆலயத்தில் நேற்று காலை குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடியும் ஏசு கிறிஸ்துவின் பாடல்களை பாடியபடியும் ஆலயத்தை வந்தடைந்தனர்.
அதை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் விழுப்புரம் கிறிஸ்து அரசர் ஆலயம், கீழ்பெரும்பாக்கம் புனித சவேரியார் ஆலயம் உள்பட விழுப்புரம் பகுதிக்குட்பட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி மற்றும சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.