கொடைக்கானல்-பழனி இடையே கூடுதல் சாலை அமைக்க நடவடிக்கை அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் உறுதி

கொடைக்கானல்-பழனி இடையே கூடுதலாக ஒரு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க. வேட்பாளர் ரவிமனோகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-28 17:01 GMT
கொடைக்கானல், 

பழனி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவி மனோகரன், கொடைக்கானல் பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக ஆனந்தகிரி மாரியம்மன் கோவிலில் வழிபட்டு பிரசாரத்தை தொடங்கினார். அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகர்கள், பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். 
தொடர்ந்து தேவாலயங்கள், பள்ளிவாசல்களுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் வர்த்தக சங்கத்தினர், சுற்றுலா வாகன டிரைவர்கள்-உரிமையாளர் கள், கட்டுமான சங்கத்தினர் ஆகியோரை சந்தித்து அ.தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடையே அவர் பேசியதாவது:-

நான் 12 வயது முதலே அரசியலில் இருந்து வருகிறேன். அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் கட்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளேன். பழனி தொகுதிக்கான பல திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முக்கியமாக கொடைக்கானலில் அனுமதியின்றி உள்ள கட்டிடங்கள் வரன்முறைப்படுத்தப்படும் என கூறியுள்ளது பெரும் வரப்பிரசாதமாகும். 

நான் வெற்றி பெற்றவுடன் முதல்-அமைச்சரிடம் இந்த திட்டம் குறித்து பேசி வலியுறுத்துவேன். கொடைக்கானல்-பெருமாள்மலை இடையே ஒரு சாலையே உள்ளதால் சீசன், விடுமுறை நாட்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே பெருமாள்மலை, பழனி ஆகிய இடங்களுக்கு செல்ல கொடைக்கானலில் இருந்து கூடுதலாக ஒரு சாலை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 

மலைக்கிராமங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படு கிறது. எனவே நான் வெற்றி பெற்றவுடன் கிராமங்களுக்கு மின்சாரம், பஸ், மருத்துவம், ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். பழனி தொகுதியில் அ.தி.மு.க. வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. கொடைக்கானல் நகர், கிராம பகுதிக்கு தேவையான நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் கொடைக்கானல் நகர அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான ஸ்ரீதர், முன்னாள் நகரசபை தலைவர்கள் வி.எஸ்.கோவிந்தன், எட்வர்டு, பா.ஜ.க. மாவட்ட தலைவர் கனகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வெங்கட்ராமன், ஆவின் பாரூக், நகர அவைத்தலைவர் ஜான்தாமஸ், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அழகு வினோத், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாமுகமது, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் பிச்சை, நிர்வாகி பாலசுப்பிரமணி கூட்டுறவு வங்கி துணைதலைவர் சுதாகர் பிரபு, பா.ம.க. நகர செயலாளர் சம்சுதீன், பா.ஜ.க மாவட்ட செயலாளர் கணேஷ்பிரபு, நகர தலைவர் சரவணன், நிர்வாகி கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்