விழுப்புரம் மாவட்டத்தில் தபால் வாக்குகளை பதிவு செய்த போலீசார்

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் நேற்று தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.

Update: 2021-03-28 17:00 GMT
விழுப்புரம்,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் தபால் ஓட்டுகள் பெறும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று போலீசார் தபால் வாக்குகளை செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு விழுப்புரத்தில் மகளிர் பள்ளியில் போலீசார் தங்களது தபால் வாக்குகளை அங்கிருந்த பெட்டியில் போட்டு சென்றனர். இதில் விழுப்புரம் தாலுகாவுக்கு உட்பட்ட பணியாளர்கள் தங்களது வாக்குகளை நீண்ட வரிசையில் காத்திருந்து செலுத்தினர். 

இந்த நிலையில் அங்கு வந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.

7 தொகுதிகள்

அப்போது கலெக்டர் அண்ணாதுரை கூறுகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தபால் வாக்குகளை செலுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கு, செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், மயிலத்துக்கு பவுடா கல்லூரி, திண்டிவனத்திற்கு மான்போர்ட் பள்ளியிலும், வானூர் தொகுதிக்கு அரவிந்தர் கல்லூரியிலும், விழுப்புரம் தொகுதிக்கு விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், விக்கிரவாண்டி தொகுதிக்கு புனித மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர் தொகுதிக்கு ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் தபால் வாக்கு சேவை மையங்கள் அமைக்கப்பட்டு காவல்துறையை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.


துறை ரீதியான நடவடிக்கை

தபால் வாக்குகளை செலுத்துபவர்கள் நேரில் வந்து தான் செலுத்த வேண்டும். மாறாக அரசியல் கட்சியினர் யாரிடமும் தபால் வாக்குகளை தரக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தபால் வாக்குகுள் செலுத்துபவர்கள் அந்த மையத்தில் வைக்கப்பட்டு இருக்கும் நோட்டில் கையொப்பம் இட்டுதான் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன்  மாவட்ட போலீஸ் சூப்புரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்