கரூர் நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து, குடிநீர் வரிகள் குறைக்கப்படும்; குப்பைகள் முற்றிலும் நீக்கப்படும் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கரூர் நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து, குடிநீர் வரிகள் குறைக்கப்படும். குப்பைகள் முற்றிலும் நீக்கப்படும் என வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.
கரூர்,
கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில் பாலாஜி கரூர் மத்திய நகரத்திற்கு உட்பட்ட செங்குந்தபுரம், ராமகிருஷ்ணாபுரம், காந்தி சாலை மற்றும் மண்மங்கலம், காதப்பாறை ஊராட்சி பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் கரூர் நகராட்சியால் வீடுகள், கடைகளுக்கு உயர்த்தப்பட்ட சொத்து வரி, குடிநீர் வரியை குறைக்கவும், குப்பை வரியை முற்றிலும் நீக்கவும் நடவடிக்கை எடுப்பேன். கரூர் நகராட்சி பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றி புறநகர் பகுதியில் புதிய குப்பை கிடங்கு அமைத்து அங்கு கொண்டு செல்லப்படும். கரூர் பசுபதீஸ்வரர் கோவில் பின்புறம் அமைந்துள்ள குப்பை அரைக்கும் மையத்தை புறநகர் பகுதிக்கு மாற்றப்படும். கரூர் தொகுதியிலுள்ள ட்ரம்செட் குழுவினருக்கு டிரம் செட் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்படும்.
அதேபோல் முடிதிருத்தும் கடை வைத்திருப்பவர்களுக்கு முடி திருத்தும் உபகரணங்கள், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி பெட்டி இலவசமாக வழங்கப்படும். மேலும் நாட்டுப்புற கலைஞர்கள் அனைவருக்கும் நலவாரிய உறுப்பினர் அட்டை மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.