தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பார்வையாளர்களிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பார்வையாளர்கள்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வு செய்யவும், தேர்தல் செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 தேர்தல் பொது பார்வையாளர்களும் ஒரு தேர்தல் போலீஸ் பார்வையாளர், 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள குண்டன் யாதவை 94899 47507 என்ற எண்ணிலும், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு ராகேஷ் தீபக்கை 94899 47508 என்ற எண்ணிலும், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுரேந்திர குமார் மிஸ்ராவை 94899 47509 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புகார் அளிக்கலாம்.
புகார்
தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்து புகார் அளிக்கலாம்.
பொது மக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட கலெக்டர் அலுவலக்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் புகார் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை 1800 4253806 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், ஹெல்ப் லைன் எண்: 1950 மற்றும் 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், சி விஜில் என்னும் மொபைல் செயலி மூலமும் புகார் தெரிவிக்கலாம். இது தவிர 94864 54714 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பொது மக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை 0461-2352990 என்ற எண்ணில் தேர்தல் பார்வையாளர்களுக்கு பேக்ஸ் மூலமாகவும் அனுப்பலாம். எனவே இதைப் பயன்படுத்தி தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.