ஏழை, எளிய மாணவர்கள் அரசு பதவிகளுக்கு செல்ல போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஒரத்தநாட்டில், இலவச பயிற்சி மையம்; அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் பேட்டி
ஏழை, எளிய மாணவர்கள் அரசு பதவிகளுக்கு செல்ல போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக ஒரத்தநாட்டில் இலவச பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் வைத்திலிங்கம் கூறினார்.;
வைத்திலிங்கம் பேட்டி
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் ஒரத்தநாடு தொகுதியில் கிராமம், கிராமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் பிரசாரத்திற்கு இடையே அவர் ‘தினத்தந்தி’க்கு அளித்த பேட்டி வருமாறு:-
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் டெல்டா மாவட்டத்தில் வேளாண் கல்லூரி அமைக்கப்படவில்லை என்ற குறை இந்த பகுதி மக்களிடம் இருந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வேளாண் கல்லூரியை நான் கொண்டு வந்தேன். அதே போன்று ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக்கல்லூரியும் கொண்டு வந்துள்ளேன். இதேபோன்று தஞ்சை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
தஞ்சையின் வளர்ச்சி
செங்கிப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி அமைத்து கொடுத்துள்ளேன். பேராவூரணியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவோணம், திருவையாறில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், பாபநாசத்தில் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை அமைத்து கொடுத்துள்ளேன்.தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்த முயற்சி மேற்கொண்டேன். இது தவிர தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் தான் நடைபெற்றது. மேலும்
தஞ்சை மாநகரம் பொலிவுறு நகரமாக தேர்வு செய்யப்பட்டு பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திருமண மண்டபங்கள்
ஒரத்தநாடு பேரூராட்சி பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலம் 230-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக்கொடுத்துள்ளேன். பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்துள்ளேன். ஒக்கநாடு மேலையூர், நார்தேவன்குடிக்காடு, மேலஉளூர் ஆகிய கிராமங்களில் ஆரம்ப சுகதார நிலையம் கட்டிக்கொடுத்து உள்ளேன். எனது நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பருத்தியப்பர் கோவில் கிராமத்தில் ரூ.1 கோடியே 80 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டிக்கொடுத்துள்ளேன். இதேபோன்று தெலுங்கன்குடிக்காட்டிலும் திருமண மண்டபம் கட்டிக்கொடுத்துள்ளேன். மேலும் கண்ணுகுடி, திருமங்கலக்கோடடை மேலையூர், பாப்பாநாடு, கோநகர்நாடு, மருங்குளம், திருவையாறு, ஆம்பலாப்பட்டு தெற்கு ஆகிய இடங்களிலும் திருமண மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளேன். சில
இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற இடங்களிலும் விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
போட்டி தேர்வுக்காக இலவச பயிற்சி மையம்
தஞ்சை மாவட்டத்தில் அம்மா மினி கிளினிக் 58 இடங்களில் திறக்கப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும், தொழில் முனைவோரை அதிகரிக்க செய்யும் வகையிலும் தொழில் வல்லுனர்களுடன் கலந்து பேசி ஒரத்தநாடு தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். ஏழை, எளிய மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுகளை எதிர்கொண்டு, அரசு வேலையில் எளிதில் சேர ஒரத்தநாட்டில் இலவச பயிற்சி மையம் அமைத்து கொடுப்பேன். கல்லணைக்கால்வாய் புனரமைப்புக்காக நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் ஒரத்தநாடு தொகுதியில் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி அலுவலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பஸ் நிலையம ஆகியவையும் கட்டிக்கொடுத்துள்ளேன்.
மக்கள் ஆதரவு அமோகம்
நான் நான்கு முறை ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ளேன். அதில் 3 முறை என்னை ஒரத்தநாடு தொகுதி மக்கள் தங்களது பெருவாரியான ஆதரவை அளித்து என்னை அந்த சட்டசபை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுத்தனர். கடந்த முறை எனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக நான் தொகுதியில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்யும்போது, கடந்த முறை எனக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காததை அவர்கள் உணர்வது அவர்களிடம் பேசியபோது தெரிய வந்தது. என்னை தேர்வு செய்யாததால் கடந்த 5 ஆண்டுகள் ஒரத்தநாடு தொகுதி பின்தங்கி விட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள். தற்போது தொகுதி மக்களின் ஆதரவு எனக்கு அமோகமாக உள்ளது. நான் வெற்றி பெற்றதும் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். எனவே தஞ்சை மாவட்டம் மட்டும் அல்ல, ஒரத்தநாடு தொகுதியும் மேலும் வளர்ச்சி அடைய அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருள் வீடு தேடி வரும்
வைத்திலிங்கம் மேலும் கூறுகையில், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஒவ்வொரு குடும்ப அடைதாரர்களுக்கும் மாத உதவித்தொகையாக குடும்பத்தலைவியின் வங்கிக்கணக்கில் ரூ.1,500
வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் உழவு மானியமாக ஆண்டுக்கு ரூ.7,500 வழங்கப்படும். மாணவர், பெண்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் வாஷிங்மெஷின் வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கைவினை கலைஞர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சிறு வணிக வளாகம் மற்றும் திறன் மேம்பாட்டு வளாகங்கள் உருவாக்கப்படும். அனைத்து அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். ஒரத்தநாடு தொகுதியை சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை வாங்கிக்கொடுத்துள்ளேன்.
ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொடுத்துள்ளேன். அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று கூட நான் பார்த்தது கிடையாது. எந்த கட்சியாக இருந்தாலும் பரவாவியில்லை. எனது தொகுதியை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாங்கிக்கொடுத்துள்ளேன். தொகுதி மக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றார்.