மதுரை மாநகராட்சியுடன் இணைந்த பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி; மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் உறுதி
மதுரை கிழக்குத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணன் திருமோகூர், சக்குடி, வவ்வால்தோட்டம், மலையாளத்தான்பட்டி, விஸ்வநாதபுரம் காலனி, சிட்டம்பட்டி, மீனாட்சிபுரம், மாங்குளம், இந்திராநகர், பாரதிநகர், தேத்தாம்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று இரட்டை சிலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது அமைதி, வளம், வளர்ச்சி என்ற அம்மாவின் தாரக மந்திரத்தை லட்சியமாக கொண்டு செயலாற்றி வருகிறேன்.நான் ஜெயலலிதா அம்மாவால் கடந்த 2016&ம் ஆண்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பிரனாக தேர்வு செய்யப்பட்டேன். அப்போது மதுரையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்றதால் உங்களின் நிலை குறித்து எனக்கு நன்கு தெரியும். ஆகவே சாமானிய தொண்டான என்னை நீங்கள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்தால் உங்களின் வீடு தேடி வந்து குறைகளை நிறைவேற்றுவேன்.
மேலும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்த கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் பெரும் குறையாக இருப்பது சாலை மற்றும் குடிநீர் வசதி தான். நான் வெற்றி பெற்ற உடன் அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, சாலை வசதியை ஏற்படுத்தி தருவேன்.
இது தவிர முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிகளான பெண்களுக்கு வாசிங்மிஷன், ஆண்டுக்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிக்கு ரூ.1,500, வீடு இல்லாத அனைவருக்கும் வீடு, 200 யூனிட் இலவச மின்சாரம், வீட்டில் உள்ள ஒருவருக்கு வேலை என்று அனைத்தையும் நிறைவேற்றுவேன். அரசின் திட்டங்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்க ஏழை தொண்டான எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து வெற்றி தரவேண்டும் என்றார்.