ரூ.1 கோடி சிக்கியதில் உரிய விசாரணை: முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் தேர்தல் நடவடிக்கை; திருச்சி புதிய கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி பேட்டி
திருச்சி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.திவ்யதர்ஷினி நேற்று பதவியேற்றார். அப்போது அவர், ரூ.1 கோடி சிக்கிய பிரச்சினையில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தின் புதிய கலெக்டராக எஸ்.திவ்யதர்ஷினி நேற்று பதவியேற்றார். அப்போது அவர், ரூ.1 கோடி சிக்கிய பிரச்சினையில் எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் நடவடிக்கை இருக்கும் என்றும் கூறினார்.
புதிய கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி
தேர்தல் பறக்கும்படையினரால், திருச்சியில் ரூ.1 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த எஸ்.சிவாரசு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
மேலும், திருச்சி மாவட்ட புதிய கலெக்டராக சென்னை மாநகராட்சியின் இணை ஆணையராக பணியாற்றிய எஸ்.திவ்யதர்ஷினியை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அவர் நேற்று காலை 10.45 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டராக பதவியேற்றுக்கொண்டார். இவர், திருச்சி மாவட்டத்தின் 143-வது கலெக்டர் ஆவார்.
முதல் நாளிலே தடுப்பூசி
பின்னர், அனைத்து துறை அலுவலர்களும் கலெக்டரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, அரசு அலுவலர்களின் தபால் வாக்குகள் அளிக்கும் சிறப்பு முகாமில் பங்கேற்ற கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி, 2-ம் கட்ட கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
முன்னதாக நிருபர்களிடம் கலெக்டர் எஸ்.திவ்யதர்ஷினி கூறியதாவது:-
ரூ.1 கோடி சிக்கிய பிரச்சினை
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் ரூ.1 கோடி பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. எனக்கு அங்கு என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாது. முதல் தகவல் அறிக்கையையும் இன்னும் பார்க்கவில்லை. அங்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.
அதே வேளையில் அவசியம் ஏற்பட்டால் நேரில் சென்று விசாரிப்பேன். திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கை உள்ளிட்ட பல்வேறு பணிகளை 24 மணி நேரமும் செய்து வருகிறார்கள். எனவே, முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.