ஆயுள்தண்டனை கைதி ஈ.டி.ராஜவேல் சிறைக்குள் தற்கொலை: கோவை சிறையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை

ஆயுள்தண்டனை கைதி ஈ.டி.ராஜவேல் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கோவை சிறையில் மாஜிஸ்திரேட்டு தமிழ் இனியன் விசாரணை நடத்தினார்.

Update: 2021-03-28 02:40 GMT

வக்கீல் ஈ.டி.ராஜவேல்

கோவை சுந்தராபுரம் சிட்கோ குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரிவை சேர்ந்தவர் ஈ.டி.ராஜவேல் (வயது 52). இவருடைய மனைவி மோகனா (48). இருவரும் வக்கீல்.  ஒடிசா மாநிலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.12 கோடி மோசடி செய்த மோகனாவை ஒடிசா போலீசார் தேடி வந்தனர்.

எனவே தனது மனைவியை காப்பாற்ற ஈ.டி.ராஜவேல் கோவை ரத்தினபுரியை சேர்ந்த அம்மாசை (45) என்ற அப்பாவி பெண்ணை கொலை செய்தார். ஆனால் இறந்தது தனது மனைவி மோகனா என்று கூறி சான்றிதழ் பெற்று அவர் மீதான மோசடி வழக்கை ரத்து செய்தார்.

இதையடுத்து ஈ.டி.ராஜவேல், கணபதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் மோகனா பெயரில் சொத்து ஒன்றை பதிவு செய்ய சென்றார். அவர் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், இறந்தவர் மீது சொத்து பதிவு செய்ய முடியாது என்று கூறி மறுத்தார். 

இதைத்தொடர்ந்து மனைவியின் இறப்பு சான்றிதழை ரத்து செய்ய கோவை மாநகராட்சிக்கு ஈ.டி.ராஜவேல் விண்ணப்பித்தார். இதனால் சந்தேகம் அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் நடத்திய விசாரணையில், அப்பாவி பெண் அம்மாசை கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

சிறையில் தற்கொலை

இந்த வழக்கில் வக்கீல் ஈ.டி.ராஜவேல், அவருடைய மனைவி மோகனா, கார் டிரைவர் பழனிசாமி, உதவியாளர் பொன்னரசு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கை விசாரித்த கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி, வக்கீல் ஈ.டி.ராஜவேல், மோகனா மற்றும் பழனிசாமி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி தீர்ப்பு கூறினார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சிறை அறை கதவின் கம்பியில் துண்டால் ஈ.டி.ராஜவேல்  தூக்குப்போட்டார். அவரை சிறை காவலர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈ.டி.ராஜவேலின் உடல் நேற்று மாலை கோவை அரசு ஆஸ்பத்திரி உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு வரப்பட்டது.

 அங்கு, கோவை 3-ம் எண் மாஜிஸ்திரேட் தமிழ் இனியன் முன்னிலையில் ஈ.டி.ராஜவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக மாஜிஸ்திரேட் தமிழ் இனியன், கோவை மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். 

அதன்பிறகு நேற்று மாலை ஈ.டி.ராஜவேலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்