திருச்சி மேற்கு தொகுதியில் பரபரப்பு: போலீஸ் நிலையங்களுக்கு பணப்பட்டுவாடா; தனிப்படை சோதனையில் ரூ.1½ லட்சம் சிக்கியது
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், தனிப்படையினர் நடத்திய சோதனையில் ரூ.1½ லட்சம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி,
திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், தனிப்படையினர் நடத்திய சோதனையில் ரூ.1½ லட்சம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வேட்பாளர்கள் வீதி, வீதியாக சென்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள்.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறும் என்பதால் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
போலீஸ் நிலையங்களுக்கு பணப்பட்டுவாடா
இந்தநிலையில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அரசியல் கட்சி சார்பில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில், ஒவ்வொரு உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர், தில்லைநகர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் சிக்கியது
போலீஸ் நிலையத்தில் மேஜை டிராயர்கள், பீரோ உள்பட அனைத்து இடங்களிலும் அங்குலம், அங்குலமாக சல்லடை போட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை பண கவர்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகள், எழுத்தர்களிடம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்டவாய்த்தலை சோதனை சாவடி அருகே ரூ.1 கோடி சிக்கிய விவகாரம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், மேற்கு தொகுதிக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் போலீசாருக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டதாக எழுந்த தகவலின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.